ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சோசியலிச பெருச்சாளிகளின் காலித்தனமான வாதங்கள்.

சமீப காலமாக தாய்லாந்தில் இருந்து எழுதிவரும் "கலையரசன்" என்ற நண்பரின் வலைப்பக்கங்களை படித்துக்கொண்டு வருகிறேன்.அவருடைய பதிவு ஒன்றில் "இலங்கையில் சீன பூச்சாண்டி" என்ற ஒரு தலைப்பு இடப்பட்டு ஒரு கட்டுரை இருந்தது.அதற்க்கு முன் குறிப்பாக

"இலங்கையில் மார்க்சிச-லெனினிச பாதையில் இயங்கி வரும் "புதிய ஜனநாயகக் கட்சி" யினரால் மாதமொருமுறை வெளியிடப்படும் வெகுஜனப் பத்திரிகையான "புதிய பூமி"யில் வந்த கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகின்றது."

என்ற குறிப்பும் இடம் பெற்றிருந்தது.


அந்த கட்டுரை குறித்து சில கருத்துக்களை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அந்த கட்டுரையில்

"சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுக்கப்பட்ட அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறலாம் என்பது வேறு விடயம். சாத்தியப் பாடுகளை எல்லாம் சமகால உண்மைகளாகக் கருதுவது அறிவுடைமை அல்ல."
என்று குறிப்பிடுகிறது.சீன இதுவரை எந்த நாட்டின் மீது மேலாதிக்கம் செலுத்தவில்லையாம்.மாவோவின் காலத்திலிருந்தே திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.திபெத்தின் தனி தேசிய இனம் அழிக்கப்பட்டு மாவோவின் இசைவோடு திபெத் சுரண்டப்பட்டது ,சீனாவோடு பகைமை கொண்ட இந்தியா தலாய் லாமாவிற்கு புகலிடம் அளித்து "நாடு கடந்த அரசாங்கத்தை" அங்கீகரித்தது. திபெத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு கூசாமல் "நாங்கள் எந்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்த லட்சணத்தில் "திபெத்தில் அமெரிக்கா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது". என்று வேறு கதறுகிறார்கள்.

சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல மூலவளங்களை இறக்குமதி செய்கிற தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழப் பல இடங்களிலும் வலுப்பட்டு வருகின்றன. அண்மையிற் கூடச் சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டது. எனினும் அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை மதிப்பதாக இல்லை.
என்று கூறுகிறார்கள்.இலங்கையில் தன் கோரக்கால்களை அழுத்தி பதிந்துள்ளது சீனா.சீன தொழில் துறைக்கு தற்ப்போது பல மடங்கு எரிசக்தி தேவை.எரிசக்தியை எடுத்துசெல்ல பாதுகாப்பான பாதையாக இலங்கை இருக்கும் என்று நம்புகிறது.தென்னாசியாவில் மூலதன வல்லரசாக அமெரிக்காவிற்கு போட்டியாக உருமாற விரும்புகிறது .அமெரிக்காவிற்கு ஒரு டிகோ- கார்சியா போல சீனாவிற்கு ஒரு இலங்கை தேவைப்படுகிறது.இதில் இன்னொரு குறிப்பிட வேண்டிய கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கடற்கரைகளை கைப்பற்றி வைத்திருக்கிறது ஆகவே எங்களால் முடிந்த வரை உலக நாடுகளின் கடற்கரைகளை அபகரித்துக்கொள்கிறோம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்.நியாயப்படுத்த முயல்கிறார்கள்.இனி மேல் சோசியலிச வெறி பிடித்த சீனா மற்றும் ஏகாதிபத்திய வெறியோடு காத்திருக்கும் அமெரிக்க இந்திய நாடுகள் அங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல ,அங்குள்ள சிங்களவர்களின் உழைப்பையும் உறிஞ்சி தன் ஜீவனத்தை நடத்திக்கொள்வார்கள்.


ஒரு நாட்டின் அரசு தன் சொந்த மக்கள் மீது மேற்க்கொள்ளும் அத்துமீறல்களை குறித்து கேள்வி எழுப்புவது அந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலை இடுவதாகும் என்பதை ஒப்புக்கொள்வது ஒருவகையில் அத்துமீறலை அங்கீகரிப்பதே ஆகும்.தன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் இலங்கை அரசுக்கு ,இன ஒடுக்குமுறைக்கு துணை போகும் அளவிற்கு சரிந்துபோயிருக்கிறது "சீனத்து சோசியலிசம்".






சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர் இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளுகிற முயற்சிகள் பற்றிப் பேசுவதில்லை. சம்பூரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்பூரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் இந்தியா எண்ணெய் அகழ்வுக்கு உடன்படிக்கை செய்ததை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்கு உரியன.
என்று கூறுகிறார்கள்..இந்திய தரகு முதலாளிகள் உள்ளிட்ட சிலர் இலங்கையை தன் வியாபார சந்தையாக மற்ற முயற்சி செய்வதை நான் மறுக்கவில்லை.அதை நான் நியாபடுத்தவும் இல்லை.அவர்கள் செய்கிறார்கள் ஆகவே நாங்களும் செய்கிறோம் என்று மறைமுகமாக சொல்வது கருத்து வெறித்தனமின்றி வேறில்லை.


ரஷியா,சீனா,வியட்நாம் போன்ற நாடுகளை வழிநடத்துவது இன்று மார்க்சியமோ,சோசியலிசமோ இல்லை."உலகமயம்" என்ற கருத்தாக்கம் தான்.உலக மயம் என்ற பொருளாதார கட்டமைப்பின் பங்காளிகளாவதே இந்த நாடுகளின் ஒரே லட்சியம்.சமூக ஏகாதிபத்தியம் என்றழைக்கப்பட்ட ரஷியா,இப்போது முழுமையான ஏகாதிபத்தியமாக உரு மாறிவிட்டது.உலக பேரரசு எனும் இடத்தை கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போட்டிக்களத்தில் நாளை நிற்கப்போகிறது சீனா.அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இருபது வருடமாய் போரிட்டு விரட்டிய வியட்நாம் இன்று அதே அமெரிக்காவோடு கை கோர்த்துக்கொண்டது.மார்க்சியமின்றி உயிர் வாழ் முடியாது என்று முழங்கிய நாடுகள் இன்று உலகமயத்தோடு ஒட்டி உறவாடுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்திய பின் புலத்தில் இயங்கிய "சாடிஷ்டா" பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக கொரில்லாப்போரில் வெற்றி அடைந்த கியுபா ,சாந்தினிஷ்டா இயக்கத்தின் மூலம் புரட்சியை மேற்கொண்ட நிகரகுவா,நிலத்தடி நீர் உரிமையை காக்க தன் மக்களை ஆயுதம் எந்திப்போரட வைத்து பன்னாட்டு சுரண்டலுக்கு முடிவு கட்டிய பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாம் தன் வரலாறை வசதியாக மறந்து விட்டன.அப்படி மறக்காமல் இருந்தால் குறைந்த பட்சம் வன்னியில் கந்த கந்தலாக்கப்பட்ட மனித உரிமைகளை பற்றியாவது ஐ.நா.மன்றத்தில் இவர்கள் பேசி இருப்பார்கள். இலங்கையின் அப்பட்டமான இன படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த காரணத்தால் இங்குள்ள சோசியலிச வாதிகள் யாருக்கும் இந்து மதவெறி பற்றியோ அல்லது பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களையோ தட்டி கேட்க்க எந்த அருகதையும் இல்லை.மக்களுக்கு பயன் படாத எந்த இயக்கமும் சாக்கடையாகத்தான் போகும். இதில் சோசியலிசம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

சனி, 15 ஆகஸ்ட், 2009

தியானன் மென் சதுக்கம் -- சீன வரலாறின் கரிய பக்கங்கள்.







1989 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர் கிளர்ச்சியான "தியானன் மென்" சதுக்கப்படுகொலைகள், சீன வரலாறின் கரிய பக்கங்கள்.கடந்த ஜூன் மூன்று,அதன் இருபதாம் ஆண்டு நினைவு நாள்.இதை உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள்,சிந்தனைவாதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் அனுஷ்டித்தனர்.
ஆனால் சீனாவை பொறுத்தவரை "தியானன் மென் " சதுக்கம் பற்றி நினைவு கூறப்படாத நிலையே இன்னும் தொடர்வதாக ஊடகங்கள் சொல்கின்றன.மேலும் இந்த நிகழ்வை தன் வானளாவிய செல்வாக்கால் மூடி மறைக்கவும் முயற்சி செய்கிறது.எல்லா ஊடகங்களையும் கட்டுப்படுத்திவிடலாம்.ஆனால் இணையதளங்களில் பரவும் செய்திகளை யாரும் தடுக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்.மேற்குலகை பொறுத்தவரை சீனாவின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஒரு சிறிய செய்தி.
சீன அரசுக்கு பணிந்து கூகிள் போன்ற பெரும் நிறுவனம் தன் தேடு தளத்தில் "தியானன்மென் "படங்களை பல ஆண்டுகளாகவே தணிக்கை செய்து வைத்திருக்கிறது.அவற்றை யாரும் பார்க்ககூடாதாம்.இதே போல யாகூ மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களும் சீன அரசுடன் ஒத்துழைக்கின்றன.சீன அரசை விமர்சித்து அங்கே எழுதிவரும் பலரின் இணைய முகவரிகளை அரசுக்கு கொடுத்து ஒற்றர்களின் பணியை எளிமையாக்கிருக்கின்றன.பிரபல எழுத்தாளரான " நாகார்ஜுனன்" தன் வலைப்பதிவு ஒன்றில் தியனன்மென் பற்றிய அறிய புகைப்பட தொகுப்பை வைத்திருந்ததாக எனது நண்பர்கள் தெரிவித்து இருந்தனர்.ஆனால் பல வழியில் முயற்சி செய்தும் போதுமான புகைப்படங்கள் கிடைக்கவில்லை.இது போன்ற தொழில் நுட்ப படுகொலைகளை நிகழ்த்திய சீன அரசின் கையில் சிக்கி மாண்டு போன எண்ணற்ற மனிதர்களை நாம் இப்போது நினைவு கூர்வோம்.

சனி, 27 ஜூன், 2009

புலிகளின் வீழ்ச்சி.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது.

ஞாயிறு, 21 ஜூன், 2009

போரும் வாழ்வும்.


கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்து கொண்டிருந்த போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டது.சர்வதேச விடுதலை வரலாறில் வேறு எந்த இனமும் சந்திக்காத கொடூரமான வாழ்வை இலங்கை தமிழர்கள் எதிர் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த படு கொலைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது ராஜபக்ஷேயின் அரசு.தமிழ் நாட்டின் சொந்த சகோதரர்கள் கண்களை மூடிக்கொள்ள,உலகமே வேடிக்கை பார்க்க துடிக்க,துடிக்க இந்த நிகழ்வு நடந்து முடிந்து விட்டது.
"தேச பக்தி" என்ற பெயரில் வரலாறு முழுவதும் அந்த அந்த நாட்டின் சுயநல விஷமக்கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன,இருக்கும் இந்தியாவை விடுங்கள்,உலக அரசியல் வானில் ஒரு செந்தாரகையாக தோன்றிய மாவோ உருவாக்கிய செஞ்சீனம் தன் நாட்டின் பச்சையான சுயநலம் கருதி இந்த படுகொலையை நிகழ்த்த எல்லா உதவிகளையும் செய்து வந்ததை மக்கள் அறிவார்கள்.அப்படி என்றால் இந்த நாடு பேசும் "பொதுவுடைமைக்கொள்கை" என்பது என்ன?தன் சுய நலத்திற்காக ஒரு இனத்தை படுகொலை செய்து அண்டை நாடுகளை மிரட்ட "அம்பாந்தோட்டையில்" ராணுவத்தளவாடம் அமைப்பது மட்டும் தானா?
இலங்கை அரசு பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவந்து விட்டதாக தன் நாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது.இந்த தீர்மானத்தை பாராட்டி வழிமொழியும் நாடுகள் வரிசையில் க்யுபாவின் புரட்சித்தலைவன் "பிடல் காஸ்ட்ரோவின்" பெயரும் இடம் பெறுகிறது.அப்படி என்றால் க்யுபா நடத்திய போராட்டத்திற்கு என்ன பெயர்?
என்னதான் புலிகள் மீது விமர்சனமும்,கருத்து முரண்பாடுகளும் இருந்தாலும் நடக்கும் மனித படுகொலைகளுக்கு எதிர் வரிசையில் எப்படி நம் காம்ரேடுகள் அமர்ந்திருக்கின்றனர் என்பது ஒரு புரியாத புதிர்.
இறுதியாக நான் கேட்கும் கேள்விகள் இது தான்.
விடுதலைப்போராட்டம் என்றால் என்ன?
பயங்கரவாதம் என்றால் என்ன?
போர்,வாழ்வு என்பது என்ன?